சனி, 27 மார்ச், 2010

ஒரு சுயமரியாதைக்காரரின் இறுதி விருப்பம்





புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், கவிநாடு மேலவட்டம் மாலையீடு மரகத இல்லம் 909, சண்முகாநகரில் வசிக்கும் மு.பொன்னையா மகன் பொன். கருப்பையா (வயது 63) ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆகிய நான், திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 28ஆம்நாள் (10.02.2010) அன்று முழுமனதுடன் எழுதி வைத்த விருப்ப மடல்.

இப்புவியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மற்ற உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் வாழ்ந்து மறைய வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு, எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக இயலாதோர்க்கு இயன்றதைச் செய்து வாழ்ந்து வருகிறேன்.

இறுகிக் கிடக்கும் பாறைச் சமுதாயத்தில் எறும்பாக ஊரி, சிறு தடத்தையாவது அமைக்க என்னை உருவாக்கிய என் பெற்றோருக்கும், கல்வியோடு கள அனுபவங்களையும் கற்றுத்தந்த அறிவியல் சமூக ஆசான்களுக்கும் நான் நன்றிக் கடனாற்ற வேண்டும்... நான் வாழ்ந்தபோது செய்த சிறுசிறு சேவைகள் காற்றில் கரைந்த கற்பூரமாகிப் போனதையும் நான் உணர்கிறேன். எனவே நான் இறந்த பிறகும் யாருக்காவது பயன்படத் தக்கவனாக விரும்புகிறேன்.

எதிர்பாராத விபத்து காரணமாக எனக்கு மூளைச்சாவு ஏற்படின், எனது உடலுறுப்புகளை, தேவைப்படுபவர்களுக்கு கொடையாக அளிக்க மனப்பூர்வமாக இம்மடல் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.

முதுமை அல்லது நோய்வாய்ப்பட்டு நான் இயற்கை மரணமடைந்தால், எனது இரு விழிகளும் பார்வையிழந்து தவிக்கும் இருவருக்குக் கண்தானம் செய்யப்பட வேண்டும். அதற்கான விழிக்கொடை விருப்ப மடலை புதுக்கோட்டை கண்ணப்பநாயனார் கண்தான அமைப்பிற்கு அளித்துள்ளேன்.

விழிகள் கொடையளிக்கப்பட்ட எனது உடலை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத் துவப் படிப்புக்குப் பயன்படத்தக்க வகையில் கொடையாக அளிக்க இதன்மூலம் நான் ஒப்புதல் அளிக்கிறேன்.

அதற்கான எனது ஒப்புதல் மடல் புதுக்கோட்டை சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மெய்யியல் துறைக்கு 27.01.2010 தேதியில் அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் 171. மேற்கண்ட உறுப்புகள் கொடை மற்றும் உடல் கொடையினை நிறை வேற்றுபவராக, எனது மனைவி யில்லாததால் எனது வாரிசுகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் எனது மூத்த மகன் க.மதிவாணனை நான் நியமித்துள்ளேன்...

எனது இறுதிக்காலம் வரை என்னை அனைத்து நிலையிலும் ஆதரித்து வந்துள்ள என் மகன் க.மதிவாணன் (தலைமை ஆசிரியர்) எனது இறப்பின் தன்மைக்கேற்ப எனது உறுப்புகளையோ உடலையோ உரிய வழிமுறைகளில் உரியவர்களிடம் கொடையாக அளிப்பார். இதில் குறுக்கீடு செய்ய வேறு எவருக்கும் எந்த வகையிலும் உரிமை கிடையாது.

அத்துடன் எனது சுயமரியாதைச் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நான் காலமான பின்னர் எனது உடலுக்கு எந்தவிதமான மத, ஜாதி, சமய சம்பிரதாயச் சடங்குகளும் நடத்தக்கூடாது. உறுப்புகளோ உடலோ ஒப்படைக்கும் முன், என்பால் உண்மையான அன்பு கொண்ட நட்பினர்க்கும் உறவுகளுக்கும் என் விருப்பம் அறிவிக் கப்பட்டு அவர்கள் அஞ்சலி மற்றும் ஒப்படை நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆவன செய்ய என் மகன் மதிவாணன் அறிவுறுத்தப் படுகிறார்.

இது எனது சுய சிந்தனையுடன் எழுதப்பட்ட விருப்ப மடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக