வியாழன், 25 மார்ச், 2010

திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணமின்றி சேர்ந்து வாழ்வது… எதுவும் தப்பில்லை! –


உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.!

Thursday, March 25, 2010 at 1:50 am 912 views

திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணமின்றி சேர்ந்து வாழ்வது… எதுவும் தப்பில்லை! – சுப்ரீம் கோர்ட்

கற்பு, திருமணத்துக்கு முன் செக்ஸ் போன்ற விஷயங்கள் குறித்து நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளானதும், அதைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகள் சில அவர் மீது தமிழகம் முழுக்க 23 வழக்குகள் தொடர்ந்ததும் மறந்திருக்காது என்று நம்புகிறோம்.

இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார் மனுதாரர்களின் சார்பில் வழக்கறிஞர் வாதாடினார். நடிகை குஷ்புவின் கருத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும் என்றும், நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்துவிடும்… தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக அவர் வாதங்களை எடுத்து வைத்தார்.

அப்போது, அந்த வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அந்தக் கேள்விகள் உண்மையில் இந்த சமூகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளே. அவை பற்றிய நமது விமர்சனமல்ல இது. ஆனால் அந்தக் கேள்விகள் சரிதானா? என்ற கூடுதல் கேள்வியுடன், அவற்றை இங்கே முன் வைக்கிறோம்.

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல. அவற்றை தடை செய்ய சட்டத்தில் இடமே இல்லை. இந்த செயல்கள் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத் தயாரா?

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா? சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும், ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது ‘வாழும் உரிமை’. வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.

நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படி பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்த கருத்து, எப்படி குற்றம் ஆகும்? எந்த சட்டவிதியின்படி குற்றம் என்று விளக்குங்கள் பார்பபோம்.

குஷ்புவின் கருத்துகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிடுகிறீர்களே,​​ அதன்படி இந்த பேட்டியைப் படித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்ணையோ பிள்ளையையோ உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

குஷ்புவின் பேட்டிக்கு பிறகு, அதனால் எத்தனை இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை குடும்பங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன என்று விளக்கத் தயாரா?

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் முறைகேடான செயலில்தான் ஈடுபடுவார்கள் என்ற அனுமானத்தில் எப்படி நாம் இறங்க முடியும்?

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று குஷ்பு சொன்னது எந்த சட்டப்படி குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?

சரி, புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா? (இல்லை என்கிறார் வழக்கறிஞர்)பிறகு எப்படி அவர் பாதிக்கப்பட்டார்? எந்த அடிப்படையில் வழக்குத் தொடர்ந்தார்?

நடிகை குஷ்பு தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து.​ அது எப்படி உங்களை பாதிக்கிறது?​ அவர் பேசியது எங்களை பாதிக்கவில்லை என்றனர்.

- இவைதான் நீதிபதிகள் கேட்ட கேள்விகள்.

இதே நீதிபதிகள், கடந்த ஜனவரி 19-ம் தேதி விசாரணையின் போது, குஷ்புவின் கருத்து பொறுப்பற்றது என கண்டனம் தெரிவித்திருந்தனர்.
“குஷ்புவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை ஏற்க முடியாது. அவர் அளித்த பேட்டியின் முழு விவரத்தை இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் கேட்டிருந்தனர். ஒரு மாத காலத்தில் இந்த கண்டனம் வழக்குத் தொடர்ந்த நபர்களுக்கு எதிராகத் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவுக்கு ஸ்பெஷல் சீட்!

இந்த விசாரணை நடந்த போது, நீதிமன்றத்தின் முன் வரிசை இருக்கையில் வழக்கத்துக்கு மாறாக குஷ்புவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பொதுவாக அங்கே சாதாரண மக்கள், மனுதாரர்கள் உட்கார முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதியில்லை என்றுதான் இத்தனை காலமாக கூறிவந்தனர். முதல் முறை குஷ்புவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்ட குஷ்பு, நீதிபதிகளின் கருத்துக்கள் தனக்கு ஆதரவாக வந்ததால் பெரும் மகிழ்ச்சிப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தார்!

-என்வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக