வியாழன், 18 மார்ச், 2010

நித்யானந்தா சீடரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, மார்ச்.18-

முன்ஜாமீன் கேட்டு நித்யானந்தா சீடர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்ஜாமீன் கேட்டு மனு

சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீநித்ய சரவணானந்தா என்கிற சந்திரன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நான், நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் வசிக்கிறேன். 1983-ம் ஆண்டு முதல் ஓமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், ஒரு விபத்தில் சிக்கி 16 ஆண்டுகள் படுக்கையில் இருந்தேன். எனது நண்பர்களின் ஆலோசனைப்படி நித்யானந்தாவை சந்தித்து ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டேன். யோகாசனம் போன்ற பயிற்சிகள் எடுத்து அவரது சீடராக மாறினேன். தற்போது பலருக்கும் நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன்.

இந்த நிலையில், நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா பற்றிய படத்தொகுப்பு சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக என்மீதும் வழக்கு தொடருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் போலீசார் என்னை கைது செய்வதாக சந்தேகம் உள்ளது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, `ஸ்ரீநித்ய சரவணானந்தா மீது எந்த போலீஸ் நிலையத்தில், எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அரசு வக்கீல் முனியப்பராஜ், `அவர்மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீநித்ய சரவணானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக