வியாழன், 11 மார்ச், 2010

சாமியார் நித்யானந்தா மீது பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு
சாமியார் நித்யானந்தா, ரஞ்சிதா ஆகியோரின் படுக்கையறை காட்சிகளை ரகசிய கேமராவில் படம் பிடித்து வெளியிட்டது, ஆசிரம சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்பது தெரிய வந்துள்ளது. அவர், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் லெனின் (35). நித்யானந்தாவின் பிரசங்கத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது ஆசிரமத்தில் சேர்ந்தார்.இந்நிலையில் ஸ்ரீநித்ய தர்மானந்தா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்துள்ள புகார்: நான் பிபிஏ படித்துள்ளேன். 1996ம் ஆண்டு அடையாறில் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை செய்தேன். 2004ம் ஆண்டு நித்யானந்தரின் சொற்பொழிவுகளை கேட்டேன். ஆன்மிகத்திலும், அவர் மீதும் அளவுகடந்த பக்தி ஏற்பட்டது. 2006 ஆகஸ்ட்டில் பெங்களூரில் நித்யானந்தா தியான பீடத்துக்கு சென்று தங்கினேன். லெனின் என்ற பெயரை ஸ்ரீ நித்ய தர்மானந்தா என்று நித்யானந்தா மாற்றினார். ஆசிரமத்தில் புத்தகங்கள், சிடி மற்றும் டிவிடிக்கள் வெளியிடும் பணியை கவனித்தேன். 18 முதல் 60 வயது வரையுள்ள 250 ஆண்களும், பெண்களும் ஆசிரமத்தில் சீடர்களாக உள்ளனர். ஆசிரமம் 40 ஏக்கரில் அமைந்துள்ளது. நித்யானந்தாவின் குடியிருப்பு ஒரு ஏக்கரில் உள்ளது.சாமியார், ஆண்டுக்கு 6 மாதம் ஆசிரமத்தில் இருப்பார். மீதி காலம் உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று வருவார். அவரது தியான வகுப்பு, சொற்பொழிவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆசிரமத்துக்கு தினமும் 300 பக்தர்கள் வருவார்கள்.

‘சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக் கூடாது. நான் கிருஷ்ணனின் அவதாரப் புருஷன். சிவன் மற்றும் பார்வதியின் அவதாரம்’ என்று நித்யானந்தா அடிக்கடி கூறுவார். ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தியானப் பயிற்சி, ஞானம் பெறுவது தொடர்பாக சொற்பொழிவாற்றுவார். பல முக்கியப் பிரமுகர்கள் ஆசிரமத்துக்கு வருவார்கள். அங்கிருப்பவர்கள் யாரும் டிவி பார்க்கக் கூடாது. பேப்பர் படிக்க கூடாது. செல்போன்கூட பயன்படுத்தக் கூடாது. தியானத்துக்கு வரும் ஆண், பெண் இருவரையும் நித்யானந்தர் கட்டிப் பிடித்து ஆசீர்வதிப்பார். ஆசிரமத்தில் 100 பெண்கள் சுவாமி நித்யானந்தாவுக்கு சீடர்களாக உள்ளனர். பெண் சீடர்களிடம், ‘நான் கிருஷ்ணனின் அவதாரம், நீங்கள் கோபியர்கள் என்று கூறுவார். 7 மாதத்துக்கு முன்பு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீநித்ய விமலானந்தா என்பவர் நித்யானந்தருக்கு பணி செய்ய சென்றார். அப்போது தன்னிடம் சாமியார் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக மனவேதனையுடன் தெரிவித்தார். அதனால் அவர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டார். அது முதல் நித்யானந்தாவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தனது செயலாளர் ஸ்ரீ நித்யானந்தா கோபிகா என்பவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். இந்தத் தகவலும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

தனக்கு விருப்பமான ஆண், பெண் சீடர்களை செயலாளர்கள் மூலம் தனது அறைக்கு வரவழைத்து பணி செய்ய சொல்வார். அப்போது அவர்களிடம், ‘நீ ஞானம் அடைந்து என் நிலையை அடைய வேண்டும் என்றால் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறி அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தெரிய வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ஆயிரக்கணக்கான சீடர்கள் தங்களது வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்து ஆன்மீகத்தில் திளைத்து, அவரது கருத்துக்களும் செயலும் தூய்மையானது என்றும், கடவுளின் அவதாரம் என்றும் நம்பி வழிபடுகின்றனர். அவர்கள் வஞ்சிக்கப்பட்டதையும், உடமைகள் பறிபோனதையும் நினைத்து வேதனை அடைந்தேன். அவரது உண்மை சொரூபத்தை தோலுரித்து காட்டி, அவரால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட அனைவரையும் காப்பாற்ற வேண்டும். இந்து மதத்தின் பெயரால் காவி அணிந்து, நம்பி வந்த மக்களுக்கும் சீடர்களுக்கும் மதத்துக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட அவரது செயலை ஆதாரத்துடன் சொல்ல முடிவெடுத்தேன். 2009 டிசம்பரில் நித்யானந்தரின் செயலாளர் ஒருவர் மூலம் ரகசிய கேமராவை அவரது படுக்கை அறையில் வைத்தோம். 2 நாட்கள் கழித்து ஒரு மெமரி கார்டை என்னிடம் கொடுத்து, நித்யானந்தாவின் லீலைகள் பதிவாகி இருப்பதாக கூறினார். அதைப் பார்த்த போது ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இருந்தன.

நடிகை ரஞ்சிதா ஓராண்டாக ஆசிரமத்துக்கு வருவார். வரும் போது நித்யானந்தாவின் பங்களாவுக்கு அருகில் உள்ள அறையில் தங்குவார். நித்யானந்தா கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அவருடன் ரஞ்சிதாவும் சென்றார். நடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வெளியுலகுக்கு தெரிவிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடந்த பிப்ரவரி 18, 19ம் தேதிகளில் பகவத்கீதை சத்சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க நித்யானந்தாவுடன் கோவை சென்றேன். 19ம் தேதி மதியம் கோவையில் இருந்து டெம்போ டிராவல்சில் சேலம் புறப்பட்டோம். என்னுடன் 15 சீடர்கள் இருந்தனர். நித்யானந்தாவும் மற்ற சீடர்களும் 5 கார்களில் வந்தனர். அப்போது என்னிடம் சில சீடர்கள் சந்தேக பார்வையுடன் தேவையற்ற கேள்விகளை கேட்டனர். நித்யானந்தாவின் கேரவன் வேனுக்கு என்னை அவரது செயலாளர் பிரணானந்தா அழைத்துப் போனார். ஆசிரமத்தில் ஏதாவது படம் எடுத்தாயா என்று கேட்டு மிரட்டினார். ‘படம் எதுவும் எடுக்கவில்லை. என்னை வீணாக சந்தேகப்படாதீர்கள்’ என்றேன். ‘உண்மையை சொல்லாவிட்டால் வேனுக்குள்ளேயே கழுத்தை நெரித்து கொலை செய்வோம்’ என்று மிரட்டினர். பயந்து போன நான், ‘உடமைகளை வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள்’ என்றேன். பின்னர் சீடர்களிடம் என்னை விட்டுவிட்டு நித்யானந்தா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அப்போது பாத்ரூம் போவதாக கூறி அங்கிருந்து தப்பினேன். இவ்வாறு லெனின் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக