புதன், 24 மார்ச், 2010

நூல் அறிமுக விழா




சி(வ)றந்தது ஒரு செவ்வாய்க்கிழமை!

65 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நேற்று (23.3.2010) நடைபெற்றது ஒரு நேர்த்தியான விழா.

திரும்பிப் பார்க்கிறேன்!

முகம் ஆசிரியர் மாமணி அவர்களால் ஆக்கப் பெற்ற நூல் திரும்பிப் பார்க்கிறேன் என்பதாகும். 192 பக்கங்-களைக் கொண்ட இந்த நூலின் அறிமுக விழா மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர்



மீனாட்சி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.சம காலத்தில் வாழ்ந்த 526 பேர்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்நூலுக்குரிய தனிச்சிறப்பு. நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடக்கத்தில் இதனையே மய்யமாகக் கொண்டு கருத்தினைப் பதிவு செய்தார்.

பதிவு செய்தோமா?

நாம் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோமா? அப்பா பெயர் தெரி-யும், அம்மா பெயர் தெரியும், தாத்தா பெயர் தெரி-யும்; கொள்ளு தாத்தா பெயர் தெரியுமா? கொள்ளு பாட்டி யார் என்ற குறிப்பு நம்மிடம் உண்டா? நமது சமூகத்தில் இது மிகப்பெரிய குறை என்று சொன்ன தமிழர் தலைவர், நூலாசிரியர் சம காலத்தில் வாழ்ந்த 526 பேர்களைப் பதிவு செய்துள்ளதைப் பலபட பாராட்டினார்.



நூல் அறிமுக விழா - ஓர் இலக்கணம்!

நூலை அறிமுகப்படுத்தும் விழாவில் எப்படி பேசவேண்டும்? எதைப் பேசவேண்டும்? எவ்வளவு நேரம் பேசவேண்டும் என்ற ஓர் இலக்கணத்தை ஏற்படுத்தியதுபோல அமைந்திருந்தது ஆசிரியர் அவர்களின் உரை. அங்குக் கூடியிருந்தோர் பல்-துறைச் சான்றோர்ப் பெருமக்கள். இது ஒரு கதம்ப மாலை என்று ஆசிரியர் குறிப்பிட்டது கவித்-துவமும், பொருளும் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

நன்றி மிக முக்கியம்

1. ஒருவரைப் பாராட்டுவது என்பது ஒன்று; அதனைவிட பாராட்டுதலுக்குரிய செயலைச் செய்-தாருக்கு நன்றி காட்டுவது என்பது இன்னொன்று. இது மிக முக்கியம் ஆகும்.

2. நூல்களை வாங்கிப் படிக்கவேண்டும் _ அதன்மூலம் நூலை உருவாக்கியவர்களைத் தாங்கிப் பிடிக்கவேண்டும்.

3. நூலாசிரியர் முகம் மாமணி தொடக்கத்தில் விடுதலையில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றி-யுள்ளார். அங்கு அவர் கற்றுக்கொண்ட சிக்கனத்தை தனது இதழிலும், நூலிலும் கையாண்டுள்ளார். தேவை-யில்லாத சொற்களைக் கையாளவில்லை. இரண்டு வரிகள் என்றாலும், அதில் சிந்தனைப் பொறி கிளம்புகிறது.

கிந்தனார் பதில்கள்!

அவரின் கிந்தனார் பதில்கள் தனித்தன்மையானவை. இன்னொருவரால் பின்பற்றவும் முடியாதது. அறிவில் பட்டதை தயக்கமின்றி யாரையும் விமர்சிக்கக் கூடியவர் _ என்னை உள்பட! தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார்: ஒரு பிரச்சினையை அணுகும்போது அதைப்பற்றி மட்டுமே அலசி ஆராயவேண்டும். அதை எழுதினால் யார் யார் கோபத்துக்கு ஆளாக நேரிடும்? பின்விளைவு என்ன? பக்க விளைவுகள் என்ன? என்று பார்க்கக்-கூடாது என்பார். அந்தப் பார்வை நூலாசிரியர் முகம் மாமணியிடம் இருப்பது பாராட்டத்தக்கது.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற் சென்றிடித்தற் பொருட்டு எனும் திருவள்ளு-வரின் வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரேயாயினுமாகுக, அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும் என்று முதல் குடிஅரசு இதழின் முதல் தலையங்கத்-திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா! அந்த குரு-குலத்துச் சீடரும் அவ்வாறு இருப்பதில் ஆச்சரியமில்லையே!

படிப்பு மூன்றாம் வகுப்புதான்!

4. மூன்றாம் வகுப்புவரைதான் பள்ளிப் படிப்பு. அதன்பின் உழைப்பால், முயற்சியால் பட்டதாரியாகி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்து, அதன்பின் அந்தத் துறையில் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றார் என்பது இன்றைய இளைஞர்களுக்கான வழிகாட்டுதலாகும்.

உழைப்பால் யார் யார் எப்படியெல்லாம் இங்கு முன்-னேறினார்களோ அவர்களைப்பற்றி நம் மாணவர்-களுக்கு, இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுக்க-வேண்-டும். இதில் மற்ற நாட்டுக்காரர்கள்பற்றிய எடுத்துக்-காட்டைவிட இது முக்கியமானது.

பூங்காவில் (சு)வாசித்தவர்!

பூங்காக்களைப் பொழுதுபோக்குக்காக, காதலர்களின் உறைவிடமாகப் பயன்படுத்துபவர்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால், அந்தப் பூங்காக்களை படிப்பகமாக, அறிவை வளர்த்துக் கொள்ளும் நூலகமாக மாற்ற முடி-யும் என்பதைத் தம் வாழ்வில் சாதித்திருக்கிறார் முகம் மாமணி.

பூங்காவால் புத்தறிவு பெற முடியும், புத்தாக்கம் பெற முடியும் என்று ஆக்கிக் காட்டியிருக்கிறார். முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஓர் ஒளிவிளக்கு!

செவ்வாய்க்கிழமைகளில்....

5. இந்த நூல் அறிமுக விழாவில் சிறப்பான இன்-னொரு நூலை அறிமுகப்படுத்தினார் ஆசிரியர்.

சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது வாங்கிய நூல். நூலின் பெயர்Tuesdays with Morrie என்பதாகும். அதன் ஆசிரியர் மிட்ச்சு ஆல்பம் (Mitch Albom) என்பவர்.

மோரி என்பவர் பல்கலைக் கழகப் பேராசிரியர்; பிற்காலத்தில் கடுமையான நோய்க்கு ஆட்பட்டார். மற்றவர்கள் துணையின்றி எதையும் அவர் செய்து-கொள்ள முடியாத நிலை. ஆனாலும், அதுபற்றி அவர் கவலை கொண்டார் இல்லை; முடங்கினார் இல்லை. அவர் எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்; என்னைக் குழந்தைபோல் நினைத்து அன்பு பாராட்டுகிறார்கள். இதைவிட எனக்கு என்ன மகிழ்ச்சி தேவை?

மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார்.

நோய் - ஒரு தடையா?

நோய்வாய்ப்பட்ட நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திய இந்தப் பேரா-சிரியர்பற்றி பல இடங்களிலும் சிறப்பாகப் பேசப்பட்டது.

இவரிடம் பேட்டி எடுத்து தொடர்ச்சியாக ஒளி-பரப்ப-வேண்டும் என்று தொலைக்காட்சியின் உரிமையாளர் ஒருவர் விரும்பினார் _ இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்-சியாகவும் அமையும் என்பது அவரின் எண்ணம்.

திரைப்படமாகவும் வந்தது

அந்தத் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றிய மிட்ச்சு ஆல்பம் என்பவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த ஆல்பம் என்பவர் யார் என்றால், அந்த நோய்வாய்ப்பட்ட பேராசிரியரின் பழைய மாணவர். மிகவும் வசதியாகவும், பொருத்த-மாகவும் போய்விட்டது.

பேராசிரியரைச் சந்தித்தார். தன் இயலாமையை வெளிப்-படுத்தினார் பேராசிரியர். பரவாயில்லை; உங்கள் வசதிக்கு நேரத்தை ஒதுக்கித் தாருங்கள். நான் பேட்டி காணத் தயாராக இருக்கிறேன் என்றார் செய்தியாளர்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையில் பேட்டிக்கு நேரம் ஒதுக்கித் தந்தார்.

(அதுதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு.Tuesdays with Morrie)

எல்லாம் செவ்வாய்க்கிழமைகளில்...

நான் இந்த நூலை வாங்கியதும் ஒரு செவ்வாய்க்-கிழமை. நான் அந்நூலைப்பற்றி இங்கு பேசுவதும் செவ்-வாய்க்கிழமை என்று ஆசிரியர் சொன்னபோது, அரங்-கமே கலகலத்தது. மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளவேண் டாம். எதிர்பாராப் பொருத்தம் என்றார்.

தொடராக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறகு அந்தத் தொடர் சினிமா-வாகவும் எடுக்கப்பட்டது.

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இன்னொரு நூலைப்பற்றியும் மிக அழகுற அறிமுகப்படுத்தினார் விடுதலை ஆசிரியர்.

அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார்

6. இந்த நூலோடு ஒப்பிட்டு இன்னொரு நூலை-யும் அறிமுகப்படுத்தினார் தமிழர் தலைவர்.

அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் என்பதுதான் அந்த நூல்.

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் முதுமை-யடைந்த நிலையில், அவரைச் சந்தித்துச் சந்தித்து அவரிடமிருந்து கருத்துகளையும், தகவல்களையும் பெற்று அறிவுச்சுரங்கம் அப்பாதுரையார் என்ற தலைப்-பில் நூலாகக் கொண்டு வந்தவர்தான் நமது மாமணி முகம் மாமணி என்றார், விடுதலை ஆசிரியர் அவர்கள்,

பெரியார் என் கடவுள் என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் கூறியதாக இந்நூலில் குறிப்-பிடப்பட்டுள்ளது.

‘Tuesdays with Morrie’ என்ற நூலோடு இதனை ஒப்பிட்டுச் சொன்னதை கற்றறிந்த அந்த மாமன்றம் மிகவும் ரசித்து கரவொலி எழுப்பியது.

ரூபாய் பத்தாயிரம் பரிசு

7. சிறந்த பகுத்தறிவுப் படைப்புக்குப் பேராசிரியர் சி. வெள்ளையன் நினைவு அறக்கட்டளை சார்பாக பத்தாயிரம் ரூபாய் அளித்து வருகிறோம்.

முகம் மாமணி அவர்களுக்கு அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் என்ற நூலுக்காக பத்தாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்ற இனிய அறிவிப்போடு தன் உரையை நிறைவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.

75 மணித்துளிகள் நடைபெற்ற இவ்விழா, நூல் அறிமுக விழாவிற்கான நேர்த்தியை வெளிப்படுத்-தியது. அதிக நேரம் இல்லாமலும், அதேநேரத்தில் கருத்-தாழத்துடனும், ஆடம்பரம் இல்லாமலும் நடை-பெற்ற இவ்விழா இத்திசையில் எடுத்துக்-காட்டானது என்பதில் அய்யமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக