சனி, 3 ஏப்ரல், 2010

கம்பனும் வால்மீகியும்

தமிழனாகிய கம்பன் ஆரியம் என்றால் கேழ்வரகு என்கிறவரையில் மாத்திரம் தெரிந்திருந்-தானானால் அவனுக்கு வால்மீகி நூலை எடுத்தோதிய வேதியர்கள் புளுகியிருத்தல் வேண்டும். ஆனால், அக்காலத்து வேதியர்கள் புளுகர்கள் அல்லர் என்று யான் முழுதும் நம்பியிருத்தலினாலே புளுகு என்று தோன்றிய முழுமையினையும் நம்மவன் கம்பனின் புளுகு என்றே யான் தீர்மானித்தேன். அவ்வளவு திறமையுடன் புளுகும் வன்மையும் புளுகு சக்ரவர்த்தியாகிய கம்பனையன்றி வேறு யார்க்கும் கிட்டக் கூடிய தென்றும் யான் நம்பவில்லை.

புலமையுடையோர் சங்க நூற்களை மிகவும் பாராட்டுதல் அவைகளுள் பொதிந்து பொலியும் இயற்கை நவிற்சியணிகளை வியந்தன்றோ? அவ்வாறாயின் உலக இயற்கை நிகழ்ச்சிகள் அன்று எத்தகையனவோ இன்றும் அத்தகையனவாகவே நம் இரு விழிகள் காண நிகழ்வதெனத் தோன்றும் அழகுடன் நவின்று செல்வது வால்மீகம், அதற்கு முற்றிலும் மாறாக, செயல் கடந்த செயற்கைக் கட்டென்றும் கம்பன் கனவென்றும் இயற்கை உணர்வினர் எவரும் எண்ணும்படி நவின்று செல்வது கம்பன் நூற்ற நூல்.

மற்றையப் புலவர்களைப் போன்று காலத்தால், சொல் வழக்கால், செவி வழக்கால் மாறி மாறிப் பிறழ்வடைந்து பின் வந்தெய்திய பாட்டிக் கதைகளைத் தங்கள் புலமை கொண்டு புனைந்து எழுதுபவர்கள் போன்றவரல்லர் _ வால்மீகி.

.. இராமன், சீதை, இலக்குவன், தாரை, இராவணன் _ முதலிய பெயர்களைப் பெயரள-விலும், இராமன், சீதை, இலக்குவன் மூவரும் காட்டிற்குப் போனார்கள், இராமன் மனைவி சீதையை இராவணன் கொண்டோடிப் போனான், இராமன் குரங்குக் கூட்டத்தோடு கடல் கடந்து சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்தான் என்பன போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியளவிலும் வால்மீகி நூலிற்கும் கம்பன் நூலிற்கும் பொதுப்படக் காணக்கிடக்கின்றனவே-யன்றிச் சிறிது உற்று நோக்குங்கால் வால்மீக இராமன் வேறு, கம்ப இராமன் வேறு _ வால்மீக சிதை வேறு, கம்பன் சீதை வேறு _-வால்மீக தாரை வேறு, கம்பன் தாரை வேறு என்பனவும், கம்ப மண்-டோதரியோ கம்பன் மண்டையோட்டிற்குள்ளிருந்து பிறந்தவள் என்பதும் தெளிவாகும்.

கதை நிகழ்ச்சிகளிலும் வால்மீகி நிகழ்ச்சிகளோ இயற்கைக்கு மாறாத வாய்மையெனத் தோன்றும் நிகழ்ச்சிகள் கம்ப நிகழ்ச்சிகள் என்றாலோ இயற்கைக்கு வேறாய பெரும் பெரும் புளுகுகள் என்று ஓரமின்றிய உள்ளப் பாங்கினருக்கு வெட்ட வெளியாகப் புலப்படக் கூடியனவாம்..

(கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்று நூலிலிருந்து)
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக