செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சீனாவில் பெண் குழந்தைகளைக் கொன்று ஆற்றில் வீசும் கொடூரம்!


பெய்ஜிங்: ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்ற மனப்பான்மையால், பெண் குழந்தைகளைக் கொல்லும் கொடூரம் சீனாவில் அதிகரித்துள்ளது.


சமீபத்தில் கிழக்கு சீனாவில் 21 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளன.

சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் பிறகு அவர்கள் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த நிலையில், கிழக்கு சீனாவில் உள்ள ஜினிங் நகரில் ஓடும் ஆற்றில் 21 குழந்தைகளின் உடல்கள் மிதந்தன. அவற்றில் சில முழு வளர்ச்சி அடையாத கருக்களாக இருந்தன. குழந்தைகளின் உடலில் மருத்துவமனையின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்ட துணி சுற்றப்பட்டு இருந்தது. இந்த குழந்தைகளை பெற்றோரே கொன்றுவிட்டு உடல்களை ஆற்றில் தூக்கி வீசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

21 குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் கைப்பற்றிய போதிலும், கொன்று ஆற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட மருத்துவமனை ஊழியர்கள் சிலரைகிழக்கு சீன மாகாண அரசு சஸ்பெண்ட் செய்தது.

சீனாவில் பெண் சிசுக்கொலை அதிக அளவில் நடக்கிறது என்று மனித உரிமைக் குழுவினர் குற்றஞ்சாட்டி வந்தபோதிலும், அதை கையும், களவுமாக பிடித்து சுட்டிக்காட்ட அவர்களால் முடியாமல் இருந்தது. இப்போது அவர்களுக்கு இந்த சம்பவம் மூலம் போதுமான ஆதாரம் கிடைத்து உள்ளது.

இந்த சம்பவம் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
www.sivajitv.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக