செவ்வாய், 6 ஏப்ரல், 2010

மதங்களுக்கு மதம் பிடித்தால்!

சமீபத்தில் கவனத்தை ஈர்க்கும் வகை-யில் இந்தியாவில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்நிகழ்வுகள் குறித்து பெரும்பாலா-னோர் கவலைப்படாதது மிகவும் கவலைக்குரியது. ஒன்று இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான எம்.எப்.-உசேனை தொடர்ந்து அச்சுறுத்திய இந்து மத அடிப்படைவாதிகளுக்கு பயந்து, அவர் கத்தார் நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருப்பது. மற்றொன்று வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஏற்கெனவே அவுட்லுக் ஆங்கில இதழில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில் இருந்து விடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுதிய கட்டுரையின் கன்னட மொழி-யாக்கத்தை கன்னட பிரபா என்ற நாளிதழ் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிமோகா நகரில் முஸ்லிம் மதவெறி அமைப்புகள் நடத்திய கலவர ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் சாகடிக்கப்பட்டனர்.

எம்.எஃப்.உசேன் இந்துமத கடவுள்-களை நிர்வாணமாக படம் வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பஜ்ரங்தள் பேன்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் பல்வேறு அமைப்புகள் 1996 முதல் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல்கள் பல்வேறு வகைப்பட்டவை. அகமதாபாத்தில் இவரது ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்த கலைக்கூடத்திற்குள் புகுந்து பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

1998 இல் இதே பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள உசேனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மகாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த அன்றைய பண்-பாட்டுத்துறை அமைச்சர் பிரமோத் நாவல்கர் மும்பை காவல்துறை ஆணை-யரிடம் கொடுத்த புகாரின் அடிப்படை-யில் உசேன் மீது முதன் முதலாக வழக்கு தொடரப்பட்டது. இதைத்-தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்-சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சிவராஜ் பாட்டீல் உத்தரவிட்டதன் அடிப்படையில் மும்பை மற்றும் புதுடில்லி காவல்துறை ஆணையர்கள் உசேன் மீது வழக்குகளைத் தொடர்ந்-தனர். அதன் பிறகு ஏராளமான வழக்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உசேன் மீது தொடுக்கப்பட்டு, ஜாமீனில் அனுமதிக்கக் கூடிய மற்றும் அனு-மதிக்காத தாக்கீதுகள் நீதிமன்றங்களால் தரப்பட்டன. முத்தாய்ப்பாக 2006இல் இவ்வழக்குகள் அனைத்தையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்-டது. வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இவ்வழக்குகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டது. இவ்வாறான வழக்குகளைத் தொடுக்க மாநில, மத்திய அரசுகளின் முன் அனுமதி தேவை என்ற விதிமுறையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உசேனுக்கே இந்த கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மீதான வழக்குகளுக்கு ஆதாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், உசேனுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்-தன. குஜராத் மாநிலத்தின் மேசானா மாவட்ட பி.ஜே.பி. தலைவர், உசேனின் கண்களைத் தோண்டி அவரது வலதுகை கட்டைவிரலை வெட்டி வருபவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசு என வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவ்வாறு மதவாத அமைப்புகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டு-வதன் மூலம் தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள். தங்கள் மீதான சிறு விமர்சனங்களைக் கூட ஏற்றுக் கொள்ளும் உறுதி இல்லாதவர்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு தங்கள் நம்பிக்கையின் மீது அய்யப்பாடு ஏற்பட்டுள்ளது தான் இரக்கத்திற்குரியது. இந்த மண்ணின் சட்டத்தை இவர்கள் கிஞ்சித்தும் மதிக்காதவர்கள். சட்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்பவர்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை பேசித் தீர்த்துக் கெள்ள வேண்டும் என்ற நடைமுறை சாத்தியப்பாட்டிற்கு எதிரானவர்கள். யாரையும் எதையும் மதிக்காதவர்கள். தான்தேன்றித்தனமான இவர்களின் அராஜக நடவடிக்கை-களுக்கு முன்பு நமது ஆட்சியாளர்கள் கைகட்டி நிற்பது மிகவும் ஆபத்தானது.

இந்து மதவாத அமைப்புகளின் அராஜகத்திற்கு உசேன் மீதான தாக்குதல் கட்டியம் கூறுகிறது. அதே-போல் முஸ்லிம் மதவாத அமைப்பு-களின் அராஜகத்திற்கு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மீது அவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் சாட்சியமாக உள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வங்க-தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தஸ்லிமா நஸ்ரின் தனது லஜ்ஜா நாவல் மூலம் வெளிப்படுத்தினார். அந்-நாவலை வங்கதேச அரசு தடை செய்தது நமக்கு வியப்பை அளிக்க-வில்லை. ஆனால் இந்தியாவிலும் பல மாநில அரசுகள் அந்நாவலை தடை செய்ததுதான் விந்தையானது. இந்-நாவல் வெளிவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச முஸ்லிம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலைத் தாங்க முடியாமல் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இங்கும் அவர் மீதான தாக்குதல் தொடர்கிறது. அவர் ஒவ்வெரு ஊராக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில்தான் தனக்கு பாதுகாப்பு உள்ளது என்று வந்த தஸ்லிமாவுக்கு பாதுகாப்பு தர அம்மாநில இடது முன்னணி அரசு மறுத்துவிட்டது. சமீபத்தில் கர்நாட-காவில் இவரது கட்டுரைக்கு எதிராக பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. இவர் முஸ்லிம் பெண்-களின் விடுதலைக்காக குரல் கொடுப்-பதை முஸ்லிம் தீவிரவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆப்கானில் மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்து வரும் தலிபான்-களின் கொடுமைகளை அந்நாட்டு மக்களால் தாங்க முடியவில்லை. இவர்கள் வளர்ந்து விட்டால் அடக்-குவது கடினம். இவர்களை முளை-யிலேயே கிள்ளியெறிய வேண்டும். ஆனால் வாக்குவங்கி அரசியலில் மூழ்கியுள்ள நமது அரசியல்வாதி-களால் இதை சாதிக்க முடியுமா? நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால் முடியாது என்றே தெரிகிறது. காங்-கிரஸ் கட்சி ஒரு மதவாத அமைப்பாக இல்லை என்றாலும், அதன் மதச்சார்பற்ற கோட்பாடு உறுதியற்றது என்று விமர்சனம் செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1980 வரை கேரளாவில் முஸ்லிம் லீக்-கு-டன் கூட்டணி வைத்திருந்தது. 1980_-க்-குப் பிறகு முஸ்லிம் லீக்குடன் கூட்-டணி சேர்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனது பெயரை இந்தியன் நேஷனல் லீக் என்று மாற்றி, தன்னை மதசார்பற்ற கட்சி என்று அறிவித்தது. அப்போதும் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை சி.பி.எம். எடுத்தது. பெயர் மாறினால் குணம் மாறி-விடாது என்று கூறியது. ஆனால் அதே கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக பின்னால், கோவை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட மதவாத அமைப்-பான மதானியின் மக்கள் ஜனநாயகக் கூட்டணியுடன் கூச்சநாச்சமில்லாமல் உறவு கொண்டது. மண்டல் கமிஷன் அறிக்கை வந்த போது மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினரே இல்லை என்பதால் மண்டல் கமிஷனின் பரிந்துரையை மேற்குவங்கத்தில் அமல்படுத்த தேவையில்லை என்றது. ஆனால் தற்போது மேற்குவங்கத்தில் 24 சதமாக உள்ள முஸ்லிம் வாக்கு வங்கியைக் குறிவைத்து, அவர்களுக்கு 10 சதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்-டத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் முஸ்லிம்-களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் சி.பி.எம். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியிருப்பது ஓர் ஏமாற்று வேலை. இதில் வியப்பு என்ன-வென்றால் இவர்கள் இச்சட்டத்தை இயற்றிய அதேநாளில், ஆந்திராவில் தரப்பட்ட இந்த ஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தான். மத அடிப்படையில் இடஒதுக்கீடு தரு-வதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியபிறகும் இவர்கள் அச்சட்டத்தை திரும்பப் பெறவில்லை. வாக்குவங்கி அரசியலுக்கு இவர்களும் பலியாகிவிட்-டார்கள். இவர்களே இப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்-டியதில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் இவ்விரு மதங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மதவெறி உணர்வு கொண்டிருக்கவில்லை. இருபுறமும் உள்ள ஒரு சிறுபான்மை கூட்டம்தான் பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொண்டு வருகிறது. பெரும்பான்மை மக்கள் நினைத்தால் இவர்களுக்கு கடிவாளம் போடுவது மிகமிக எளிதானது. அந்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

- கலை
நன்றி: தமிழக அரசியல்,
28.3.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக