சனி, 3 ஏப்ரல், 2010

துணுக்குகள்..
பிராமணங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வேத காலத்தில் பூணூல் அணியும் வழக்கம் காணப்படாமையால், அதுபற்றி உண்டான சாதி வேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபத பிராமணத்திலும் (2,4,2) கவ்ஷீதகி உபநிஷத்திலுமே (2,7) பூணூல் அணியும் குறிப்பு முதன் முதல் காணப்படுகிறது. இவ்விரண்டிலுங்கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்கும் காலைப் பொழுதிலும், வேள்வி வேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து, மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் பழக்கம் நன்கு தெரிந்தோதப்பட்டமையால், இந்நூல்கள் உண்டான காலத்திலும் சாதி வேற்றுமையின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லை. மற்று இக்காலத்திலோ இறைவனை வணங்காமல், உலகியல் தொழில்களையே அல்லும் பகலும் புரிந்து, தமது வயிற்றுக்கும் தம்மைச் சேர்ந்தாரது வயிற்றுக்குமே பாடுபட்டு உழன்று, தீவினைகளை ஈட்டுவோர் எந்நேரமும் அப்பூணூலை அணிந்து கொண்டு தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி இறுமாந்து அய்யகோ! மேன்மேல் தீவினைகளைப் பெருக்கி வருகின்றனரே!

மறைமலையடிகள், (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் பக்கம் 14)


-------------------------------------------------------------------------------------------------
இராம ராஜ்யமா?

காந்தியடிகளின் சில சொற்கள் எனக்கு வெறுப்பாகக்கூட இருந்ததுண்டு. உதாரணமாக, இராம ராஜ்யம் என்ற பொற்காலம் இனி வரப்போகிறது என்று அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், அதில் தலையிடுவதற்கு நான் சக்தியற்றவனாயிருந்தேன்.

_ ஜவகர்லால் நேரு


-------------------------------------------------------------------------------- ----------------
வியாபார பக்தி!

நமது வியாபாரிகளுக்குச் சிறிது பணம் வந்துவிட்டால் வீட்டில் பூஜை, விரத அனுஷ்டானங்கள் வந்து புகுந்து கொள்ளும். மேல் ஜாதி என்பதற்கு வேண்டிய நடிப்பைக் கற்றுக்கொடுக்க புரோகிதக் கூட்டம் நிறைந்துவிடும். கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகம் செய்வதும், தெய்வங்களுக்கு வாகனங்கள், ஆபரணங்கள் செய்வதும், பிராமண சமாராதனைகள் பண்ணி புண்ணியத்தைத் தேடி மோட்சமடைவதற்கு யாத்திரை முடிப்பதும் -_ ஆகிய இவற்றில் அவர்கள் பணமும், காலமும், புத்தியும் செலவழிக்கப்பட்டு விடும். வியாபாரத்தில் ஒரு சிறு மாறுதல் வந்தால் நஷ்டமடைந்து, அதற்குப் பிறகு காலட்சேபம் கேட்பதோடு திருப்தியடைந்து விடுவார்கள். இவ்வித முறைகளினால் நமது தேசத்து வியாபாரம் கெட்டு மேல் நாட்டு வியாபாரம் விருத்தியாகி விட்டது

கைவல்ய சாமியார்
-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக