சனி, 5 ஜூன், 2010

யார்இந்தகேதன் தேசாய்?



கிடைத்த வாய்ப்பை எவ்வளவு சரியாக (மன்னிக்கவும், மோசமாக) பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தியிருக்கிறார் கேதன் தேசாய். மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்தான் அவருக்கு பணம் காய்ச்சி மரமாக இருந்திருக்கிறது. அவரது பணம் கறக்கும் பாணியே அலாதியானது என்கிறார்கள் மருத்துவத் துறையாளர்கள்.

ஒரு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம், இதர வசதிகள் செய்யப்பட்ட பிறகு, அதன் நிருவாகம், மருத்துவக் கவுன்சிலிடம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும். அதன் பிறகு ஒரு குழுவை மருத்துவக் கவுன்சில், தொடர்புள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர்களும் தீவிரமாக விசாரணை செய்துவிட்டு, அறிக்கை அனுப்புகிறோம் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள்.

சில நாள்களில், அது சரியில்லை, இது முறையில்லை என்று ஏகப்பட்ட ஓட்டைகளைக் குறிப்பிட்டு அங்கீகாரம் தர முடியாது என்ற அறிக்கை மருத்துவக் கல்லூரி நிருவாகத்திற்கு அனுப்பப்படும்.

உடனே, நிருவாகம் பதறியடித்துக் கொண்டு கவுன்சிலிடம் பேசும். அடுத்த நொடியே சுறுசுறுப்படையும். கேதன் தேசாய், தனது இடைத் தரகரை நிருவாகத்திடம் பேசுவதற்காக அனுப்புவார். அவரும் பேச வேண்டியதைப் பேசித் திரும்புவார். இவ்வாறு பேசியதன் மூலமாக ஒரு கல்லூரிக்கு தலா ரூ.30 கோடி வரை கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, நாடெங்குமுள்ள 200 தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 இடங்களைப் பெற்று, அவற்றையும் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார். இதன்மூலம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஊழல் பணத்தை கேதன் தேசாய் குவித்திருக்கிறார்.

தேசாயின் ஊழல் சாம்ராஜ்யம் நாடெங்கும் பரவிக் கிடந்தது. இது அரசின் காதுகளுக்கும் எட்டிவிட, அவரை வளைத்துப் பிடிக்க சி.பி.அய். முடிவு செய்தது. இதற்காக தக்க சமயம் பார்த்து சி.பி.அய். காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த கியான்சா கர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக ரூ.2 கோடி பணத்தை அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜே.பி. சிங், கன்வால்ஜித் ஆகியோர் தேசாயிடம் கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.அய். காவல் துறையினர் கேதன் தேசாய், கையூட்டு கொடுத்த 2 மருத்துவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் ஏ.ஆர்.என். சீதல்வாட் ஆகியோரைக் கைது செய்தனர்.

ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டில் 0.65 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றது தொடர்பாக தேசாய்மீது குற்றம் சாற்றப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.அய்.க்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கையும் தாண்டித்தான் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு தேசாய் வந்திருந்தார். இன்று அப்பதவியிலிருந்து தேசாய் விலகியிருந்தாலும், குஜராத் பல்கலைக் கழகத்தின் நிருவாகக் குழு உறுப்பினராகத் தொடர்கிறார்.

இவரைப்பற்றி இன்னொரு முதன்மையான செய்தி _ பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்லூரிகள், நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டுக்காக அப்போதைய பிரதமர் திரு. வி.பி. சிங் சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியவர் இவர். இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால், தகுதியும், திறமையும் போய்விடும் என்று கூறிய கேதன் தேசாய் போன்றவர்கள் தகுதியும், திறமையும் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.

- துரை,நன்றி: வளர்தொழில்,ஜூன் 2010

www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக