திங்கள், 7 ஜூன், 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ - சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்-கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது.

ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது.

(ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா?)

தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும்.

இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக