வெள்ளி, 4 ஜூன், 2010

இராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை தேவை

உரத்தநாட்டில் நடைபெற்ற (30.5.2010) திராவிடர் கழக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்களுள் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியதாகும்.

தீர்மானத்தின் (14அ) முதல் பகுதி_ போரினால் பாதிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் மக்களுக்குத் தேவை-யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்; இதற்கு இந்திய அரசு துணை புரிய வேண்டும் என்பதாகும்.

ஈழத் தமிழர்களின் அவதிக்குத் துணை போனது இந்தியா, அவர்களின் மறுவாழ்வுப் பிரச்-சினையிலாவது அக்கறை செலுத்தவேண்டும் என்று தீர்மானம் மூலமாகக் கேட்டுக் கொள்ளப்-பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தின் மற்றொரு பிரிவு மிகவும் முக்கியமானதாகும்.

உள்நாட்டுத் தமிழர்களைக் கண்மூடித்தன மாக இராணுவத்தைப் பயன்படுத்திக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீதான விசாரணை நடைபெறும் என்று அய்.நா. மன்றம் தெரிவித்துள்ளதை இப்பொதுக்குழு வரவேற்கிறது. இதில் காலதாமதமின்றி உடனே நடவடிக்கைகளை எடுக்க விரைந்து மேற் கொள்ளு மாறு அய்.நா.வை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

இவ்வாறு சிங்கள அரசின் மீது போர்க் குற்றம் சுமத்தப்படுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் அடுக்கடுக்காக உள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மிக வெளிப்படையாகவே இதுபற்றிக் கருத்துகளைக் கூறியுள்ளன.

ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வருவ-தாகக் கூறி கடைசி நாள்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் மிகக் குரூரமான முறையில் ராஜபக்சே அரசால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் ஒப்புக்கொண்டுள்ள எந்த விதமான நீதி, நியதிகளையும் இலங்கை அரசு பின்பற்றிட-வில்லை. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதும் குண்டு வீசியிருக்கின்றனர். மருத்துவமனை-கள் மீதும் குண்டுமாரி பொழிந்தனர். சிறுவர்கள் தங்கி இருந்த விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி, அந்தப் பிஞ்சு மலர்களைக் கருக்கிக் களியாட்டம் போட்டனர்.

முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆயிரம் இளைஞர்களை விடுதலைப்புலிகள் என்று கடத்திச் சென்று, நிர்வாணப்படுத்தி குரூரமான முறையில் சுட்டுக் கொன்றதை பிரிட்-டன் தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. தமிழினத்தில் இளைஞர்களே இனி இருக்-கக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் ராஜபக்சே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

கடைசிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சமாதானத்துக்கு வந்த போராளி-களை, உலகம் ஒப்புக் கொண்ட நியதிகளுக்கு மாறாக, சுட்டும், அடித்தும் கொன்றிருக்கின்றனர்.

ஜெனீவா ஒப்பந்தப்படி தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நாபாம் குண்டுகள், பாஸ்-பரஸ் குண்டுகளை சிங்கள இராணுவம் கண்-மூடித்-தனமாகக் கையாண்டு தமிழர்களைக் குரூரமாக அழித்தது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தி விசாரணை நடத்து-வதற்கு எல்லா வகைகளிலும் அய்.நா.வுக்குக் கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

விசாரணை நடத்தப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உத்தரவாதம் அளித்திருந்தார்.

மேலும் காலதாமதமின்றி அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கிடையே இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ள கருத்து மிகவும் மோசமானதாகும்.

இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்று அய்.நா. விசாரணை நடத்துமேயானால், அது இலங்கையின் இறையாண்மையில் குறுக்கிடும் செயலாகும் என்று கூறியுள்ளார்.

உலகத்தில் எத்தனையோ நாடுகளில் இதுபோன்ற செயல்கள் நடந்திருக்கவில்லையா என்று எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ராஜபக்சே உளறியும் இருக்கிறார்.

இந்நிலையில் இலங்கையின் மீது போர்க் குற்ற விசாரணையை அய்.நா. உடனடியாக நடத்திட வேண்டும். இல்லையென்றால் அய்.நா. மீதான மரியாதையும், நம்பிக்கையும் கலகலத்துப் போய்விடும்.

உலக நாடுகளும், மனித உரிமை அமைப்பு-களும் அய்.நா.வுக்குப் போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்து-கிறோம்.
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக