ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!


> கழகத் தோழர் வீடு என்றால் கழகக் கொடி பறக்கவேண்டும்
> கழகத் தோழர் வீட்டில் விடுதலை கழக நூல்கள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்
> தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை வலைப்பின்னல் (நெட் வொர்க்) தேவை

தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை
தமிழ்நாடே திகைக்கும் வகையில் கொண்டாடுவோம்!
திருச்சி கழகச் செயல் மறவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய வழிகாட்டும் எழுச்சியுரை



திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற, கழகச் செயல் மறவர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டும் உரை (18.8.2010).


திருச்சி, ஆக. 19 திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள், அமைப்பாளர்கள், மண்டல திராவிடர் கழகத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்களின் கலந்துறவாடல் கூட்டம் நேற்று (18.8.2010) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

குமரிமுதல் திருத்தணிவரை உள்ள கழகப் பொறுப் பாளர்கள் திரண்டிருந்தனர். பாசறைக் கூட்டம் போல தோழர்கள் திரண்டிருந்தனர். கலந்துறவாடல் கூட்டத் திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் சிறப்பாகக் குறிப் பிட்டதாவது:

புதிய பொறுப்பாளர்களுக்கு முதலாவதாக தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துத் தமது உரையைத் தொடங்கினார்.

(1) கழகத் தோழர்களின் சந்திப்பும், கலந்துறவாடலும் அடிக்கடி நடைபெறவேண்டும். ஒரு கருப்புச் சட்டைக்காரர் இன்னொரு கருப்புச் சட்டைக்காரரிடம் பாசம், அன்பைச் செலுத்தவேண்டும் ஒற்றுமை உணர்வு மேலோங்கிக் காணப்படவேண்டும்.

(2) தந்தை பெரியார் இயக்கத்தை யாரை நம்பி நடத்தினார்? தொண்டர்களை நம்பித்தான் நடத்தினார். மிட்டா மிராசுகளை, பெரும் பணக்காரர்களை நம்பி இயக் கத்தை நடத்தவில்லை. அத்தகையவர்களை உபயோகப் படுத்தியிருப்பார் அவ்வளவுதான்.

ஜஸ்டீஸ் கட்சி பணக்காரக் கட்சிதான். ஆனால், அவர் களால் அந்தக் கட்சியை நடத்த முடியாத நிலையில், தந்தை பெரியார் அவர்களிடம்தான் அந்தக் கட்சியை ஒப் படைத்தனர்.

(3) முன்பு எந்தக் காலகட்டத்தையும் விட இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக் காட்டாக இம்மாதம் 8 ஆம் தேதி வாலாஜாவில் நடைபெற்ற மண்டல மாநாடு இளைஞர்களின் பாசறையாகக் காட்சி அளித்தது. இரண்டு நாள் பயிற்சி முகாமும் நடத்தப் பட்டது. மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேரணி அப்பகுதி மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதில் அய்யமில்லை.

மிகச் சிறப்பாக மாநாட்டை நடத்திய தோழர்களுக்குப் பாராட்டுகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கி றேன்.

பெரியார் தந்த புத்தி

(4) நமக்குச் சொந்த புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தியே போதும் என்று சொல்லுவது வார்த்தை அழகுக்காக அல்ல. அது அனுபவ ரீதியானது. ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டது அப்பழுக்கற்றது. இலட்சியத்துக்காக எந்த விலையையும் கொடுக்கத் தூண்டக் கூடியது இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்களை இன்று படித்தால்கூட மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொலைநோக்கோடு அய்யா எடுத்துச் சொன்ன கருத்து களை நாம் பின்பற்றினாலே போதும்.

(5) நம்மை அழிக்க எதிரிகள் பல ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள். துரோகிகளை உற்சாகப்படுத்து வார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை; நமது செயல்பாடுகள்மூலம் அவற்றை எளிதில் முறியடித்துவிட முடியும்.

வலைப்பின்னல்!

(6) மாநிலம் மண்டலம் மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளைக் கழகம் என்று ஒரு வலைப் பின்னல் (நெட்வொர்க்) அடிப்படையில் கழக நிகழ்ச்சிகள் நடை பெற்றாகவேண்டும்.

குழந்தைகள் முகாம் முதல் மாணவர்கள், இளை ஞர்கள், மகளிர் முகாம்கள்வரை தொடர்ந்து நடைபெற்றாக வேண்டும். காலத்துக்கேற்ற அணுகுமுறைகளைக் கையாளுவோம்.

(7) கழகம் மக்கள் இயக்கமாகும். கழகப் பணி களுக்காக மக்களிடம் செல்லவேண்டும்; நிதி திரட்ட வேண்டும். அப்படித்தான் நம் இயக்கம் வளர்ந்து வந்துள்ளது. ஒரு பொதுக்கூட்டம் என்றால்கூட கடைக் குக் கடை சென்று நிதி வசூல் செய்யவேண்டும். தனிப்பட்ட நமக்காக அடுத்தவரிடம் பணம் கேட்டால் கூச்சம் வரும் கழகப் பணிக்காக பொது பணிகளுக்காக நிதி திரட்டுவதில் கூச்சப்படக் கூடாது.

அமைப்புப் பணிகள் சிறந்தோங்க நிதி என்பது மூச்சுக் காற்றாகும்.

மகளிர் அணியை உற்சாகப்படுத்துவீர்!

(8) ஆண் ஆதிக்க உணர்வு என்பது பொதுவாக சமூகத்தில் நிலவக் கூடியதுதான். நம் இயக்கத்தில் அதற்கு இடம் கிடையாது. மகளிர் அமைப்பை வளர்க்கவேண்டும்; உற்சாகப்படுத்தவேண்டும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யவேண்டும். பெண்கள் முன்னின்று நடத்தும் பிரச்சாரம் இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

நமது மாநாட்டில்தான் பெண்களுக்கென்று தனி இடம் என்பது கிடையாது. காரணம் கொள்கையும் ஒழுக்கமும் நமது இரு கண்களாகும்.

அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்!

(9) நமது பிள்ளைகளைக் கொள்கை ரீதியில் வளர்த்தெடுக்கவேண்டும். கழக நிகழ்ச்சிகளுக்குக் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டாலே நமது குழந்தைகளிடத்தில் கொள்கைகள் தாமாகவே சென்றடையும். நமது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் அக்கறை காட்டவேண்டும்.

கழகத் தோழர் வீடுகளில் கழகக் கொடி பறக்கவேண்டும்

(10) வீட்டுக்கு வீடு விடுதலை செல்லவேண்டும். தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கு விடுதலை வரவேண்டும் என்றார் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். கழக இல்லம் என்பதற்கும் அடையாளம் அதுதான். விடுதலையைப் படிக்காத தோழர்கள் இருட்டில் அமர்ந்தவர்கள் ஆவார்கள். கழகத் தோழர்கள் இல்லங்களில் இயக்க நூல்கள் இருக்கவேண்டும். குடிஅரசு தொகுப்புகள் ஒவ்வொரு கழகத் தோழர் இல்லத்தில் கண்டிப்பாக இடம்பெறவேண்டும். நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து என்பது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருவூலங்கள்தாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவற்றைப் படிக்கவேண்டும் பிள்ளைகளிடத்தில், குடும்பத்தவர்களிடத்தில் எடுத்துச் சொல்லவேண்டும்.

கழகத்தவர் வீடு என்றால் அதில் கண்டிப்பாகக் கழகக் கொடி பறக்கவேண்டும் இது ஒரு புற அடையாளமாகும்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

(11) தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு எழுச்சியுடன் கொண்டாடப்படவேண்டும். நாடெங்கும் சூறாவளியாகப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். திராவிடர் கழகத் தோழர்களுக்கு என்ன வந்தது இதுவரை கண்டிராத வேகம் எழுச்சி கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்படவேண்டும் எதிரிகள் திகைக்கவேண்டும் துரோகிகள் மருண்டு ஓட வேண்டும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் திகைக்க வேண்டும்.

திராவிடத்தால்தான் எழுந்தோம் உயர்ந்தோம் முதலில் மனிதனானோம் என்பதை தமிழ்நாட்டின் கடைகோடி மனிதனும் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.

(12) மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சுப் போட்டி, மிகவும் விரிந்த முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தோழர்களும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் இணைந்து பணியாற்றிடவேண்டும். ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க ஆவன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.


--------------------------------------------------------------------------------

1936 குடிஅரசு இதழிலிருந்து

12.1.1936 ஞாயிறன்று மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் சென்னை சுயமரியாதைச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை குடிஅரசு (19.1.1936) இதழில் வெளிவந்ததை, கழகத் தலைவரின் ஆணைப்படி கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் படித்தார்.
நன்றி- விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக