புதன், 11 ஆகஸ்ட், 2010

கோயிலைச்சுற்றுகிறதாம் பேய்!

அம்மன் சக்தி எங்கே?

மேட்டூர் ஆக 9, கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனராம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தினர். குடமுழுக்கு நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது செய்ய முடியவில்லை. கோவிலை சுற்றி உலா வரும் பேயை விரட்டினால், விழா குழுவினருக்கு நோய் பாதிப்பு வராது என சாமியார் குறி சொல்லியுள்ளாராம்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை கோவில் அருகிலுள்ள வேப்பமரத்திற்கு பூஜை செய்து, அருகில் மாவில் பொம்மை செய்து, அதில் கோவிலைச் சுற்றி திரியும் ஆவியை அடைத்து, ஊர் எல்லைக்கு வெளியில் கொண்டு சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.

பின்னர் பேய் ஊருக்குள் நுழையக்கூடாது என்பதற்காக பெண்கள் கிராமத்தின் எல்லையை சுற்றிலும் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்தனர். பேயை விரட்டிய பின் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்ததாம். கோவிலை சுற்றித் திரியும் ஆவியை பக்தர்கள் பூஜை செய்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய பின்னர் நிருவாகிகள் பலர் உடல் நலக்குறைவால் பாதித்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு வராமல் இருக்கவும், மழை வேண்டியும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, ஊருக்குள் கெட்ட ஆவிகள் நுழையாமல் இருக்க பெண்கள் ஊர் எல்லையை சுற்றிலும் தண்ணீர் ஊற்றினார்களாம். மற்றபடி எதுவும் இல்லை,'' என்றனர்.
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக