புதன், 11 ஆகஸ்ட், 2010

அட, மூடத்தனத்தின் முடை நாற்றமே!

ஊருக்குள் ஆவி நடமாட்டமா?

நாமக்கல், ஆக.9, நாமக்கல் அருகே வாகை மரத்தில் குடியேறிய தொழிலாளியின் ஆவி ஊருக்குள் நடமாடி நண்பர்களை மிரட்டுவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளியை புதைத்த இடத்தில் கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனராம்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செக்குப்பட்டி காலனியில் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்ற கூலி தொழிலாளி சமீபத்தில் பள்ளிபாளையம் அருகே ரெயிலில் அடிப்பட்டு இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை பெற்று வந்த உறவினர்கள் இங்குள்ள சூடுகாட்டில் புதைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக லோகநாதனின் ஆவி, அங்குள்ள வாகை மரம் ஒன்றில் தங்கி கிராமத்திற்குள் நடமாடுவதாக கிராம மக்களிடையே பீதி பரவியது.

இதற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குள் அந்த ஆவி புகுந்து கொண்டதாக கிராமமக்கள் கூறுகின்றனராம். அத்துடன் அந்த ஆவி, இளம்பெண் மூலம் லோகநாதனின் நண்பர்களையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஆவியை விரட்ட, கிராம மக்கள் ஊர் எல்லையில் உள்ள முனியப்ப சுவாமியிடம் குறி கேட்டனர். குறி கூறுபவர், வீதி வீதியாக சுற்றிவந்து, ஆங்காங்கே கோழிகளை பலி கொடுத்து, லோகநாதனின் உடலை புதைத்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தால் மட்டுமே ஆவியை விரட்ட முடியும் என்று கூறினாராம்.

அதன்படி, முனியப்ப சுவாமி வேடம் அணிந்து வந்த பூசாரி இரவில் தீப்பந்தம் ஏந்தி கிராமத்தில் வீதி, வீதியாக வலம் வந்தார். அத்துடன் லோகநாதனின் ஆவி குடியிருப்பதாக கூறப்படும் மரத்திற்கு தீ பந்தம் காட்டப்பட்டது. மேலும், லோகநாதனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டனவாம்.

இந்த பூஜையில் அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் எவரும் வெளியில் வரவில்லை. தற்போது ஆவி விரட்டப்பட்டு விட்டதாக கிராமமக்கள் நிம்மதியுடன் உள்ளனராம்.
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக